Untitled Document
Untitled Document
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமும் எதிர்பார்க்கும் இலக்கும்......வவுனியா நகரசபையில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடுவோரின் விருப்பு இலக்கங்கள்- (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு) அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும் ...தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேசங்களின் தலையீடு ஏன்?..............சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும...சுதந்திரபுரத்தில் அப்பாவி மக்களை இலக்குவைத்த புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு சிறீ ரெலோ வன்மையாகக் கண்டித்துள்ளது...

Untitled Document

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
தேர்தலில் வாக்குகளைப் போட்டுவிட்டால் போதும் அரசியல் அதிகாரப் பகிர்வு நடந்து முடிந்துவிடும் என நினைப்பது பிள்ளையாருக்குத் தேங்காயுடைத்து பரீட்சையில் சித்தியெய்த நினைப்பது போன்றதுதான்.
 

மாகாண ஆளுநர், முதல்வர், அமைச்சரவை
- அ. வரதராஜப்பொருமாள்.

மாகாண ஆளுநர்
அமெரிக்காவின் மாகாண அமைப்பில் ஆளுநர் ; மக்களால் தெரிவு செய்யப்படுபவர். மாகாண அரசாங்கத்தின் தலைவர் அவரே. அவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார். ஆனால் இந்திய அமைப்புமுறையில் மாநில ஆளுநரானவர் மாநில அரசின் தலைவராக மத்திய அரசாங்கத்தின் குறிப்பாக பிரதம மந்திரியின் ஆலோசனையின்படி ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்படுகிறார். அதேவேளை முதலமைச்சரே மக்களால் மாகாண (மாநில) சபைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களிலிருந்து நியமிக்கப்படுகிறார்;. இந்த முறையையே இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தமும் கொண்டுள்ளது. அதுவே நடைமுறையிலும் உள்ளது.ஆளுநர் முதலமைச்சர் என இரண்டு அதிகாரங்கள் இல்லாமல் அமெரிக்காவில் இருப்பதைப் போன்று மக்களால் தெரிவு செய்யப்படும் ஆளுநர் முறையே இலங்கையின் மாகாண அமைப்பிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென 1984க்கும் 1986க்கும் இடைப்பட்ட காலங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது தமிழர் கூட்டணி வலியுறுத்தியது.
அது இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின்னர் ஏது காரணமோ தமிழர் கூட்டணியினால் அக் கோரிக்கை தொடரப்படவில்லை. பெரும்பாலும் இந்திய அரசு தரப்பினர் அவ்வாறானதொரு கோரிக்கைக்கு முக்கியத்துவமளிக்க விரும்பாதது காரணமாக இருந்திருக்கலாம்.
அது ஒருபுறமிருக்க, அமெரிக்காவில் தெளிவானதொரு சமஷ்டி அமைப்புமுறை இயங்குவதனால்தான் அங்கு மாநில அரசின் தலைவரை பெயரளவில் கூட மத்திய அரசு நியமிப்பதில்லை எனவும் ஆனால் இலங்கையில் 13ஆவது திருத்தத்தின்படி நியமிக்கப்படும் ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்ற ஒருவர் என்பதால் மாகாண அரசாங்கம் ஒரு பொம்மை அமைப்பே எனவும் புலி ஆதரவுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சில மெத்தப்படித்த அரசியல் ஞான சட்ட மேதைகள் கூறுகிறார்கள். இந்த அரைகுறைகளின் கருத்து சரியானது அல்ல. அமெரிக்காவைப் போன்றே தெளிவான சமஷ்டி அமைப்பைக் கொண்ட கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் மாகாண அமைப்புக்களிலும் மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநரும் மக்களால் தெரிவு செய்யப்படும் முதலமைச்சருமே உள்ளனர். எனவே சமஷ்டியின் அளவை ஆளுநர் நியமனத்திலிருந்து அளவிடக் கூடாது. மாகாண அரசின் தலைவராக மத்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளிலிருந்தே அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். 13ஆவது திருத்தத்தில் இந்த விடயமும் இந்திய அரசியல் யாப்பின் கொப்பியே என்பதால் இந்திய அரசமைப்பில் எவ்வாறு இந்த விடயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு நாம் இவ்விடயத்தைப் புரிந்து கொள்ள முற்படுவதே எமக்கு சரியானதாகவும் பொருத்தமானதாகவும் அமையும்.
இங்கு ஆளுநர் என்பவர் உண்மையில் மாகாணத்திலுள்ள மக்களின் பிரதிநிதியல்ல மாறாக மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியே ஆவார். இந்திய அரசமைப்பில்; குடியரசு முழுமைக்கும் எப்படி ஜனாதிபதியோ அவ்வாறே மாகாண அளவில் ஆளுநர் இருக்கிறார். இலங்கையைப் பொறுத்தவரையில் உள்ள வித்தியாசம் என்னவென்றால் இங்கு மத்தியிலுள்ள ஜனாதிபதி அரசின் தலைவராக மட்டுமல்லாது அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவராகவும் இருக்கிறார். ஆனாலும் மாகாண அளவிலான ஆளுநரோ இங்கு பெயரளவிலான ஒரு அரச தலைவராகவே இருக்கிறார்.; நிறைவேற்று அதிகாரங்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் அவர் ஓர் சம்பிரதாயரீதியான தலைமை அதிகாரியாகவே உள்ளார்.
அரசியல்யாப்பின் மூலம் குறித்துரைக்கப்பட்ட விடயங்கள் தவிர ஏனைய விடயங்கள் அனைத்திலும் அவர் முதலமைச்சரினதும் மற்றும் அமைச்சரவையினதும் ஆலோசனைகளுக்கு ஏற்பவே நடந்து கொள்ள வேண்டும் என்பதையே அரசியல்யாப்பு கூறுகின்றது. ஆளுநர் தன்னிச்சையாக அதிகாரம் செலுத்தக் கூடிய விடயங்கள் மிகச் சிலவே. அவை பின்வருமாறு --
1.மாகாண சபைக்கான தேர்தல் முடிவடைந்து யார் யார் உறுப்பினர்கள் என்பது அறிவிக்கப்பட்டதன் பின்னர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சட்டமன்ற உறுப்பினர்களில் யார் பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறார் என ஆளுநர் கருதுகிறாரோ அவரை ஆளுநர் முதலமைச்சராக நியமிப்பார் என்பதே சட்டமாகும். நடைமுறையில் பெரும்பான்மையான உறுப்பினர்களை சபையில்; கொண்ட கட்சியினால் அல்லது கட்சிகளி;ன் கூட்டமைப்பினால் அங்கீகரிக்கப்படுபவரையே ஆளுநர் முதலமைச்சராக நியமிப்பார்.

இலங்கையில் வேறுவகையாக இதுவரை இவ்விடயத்தில்; சிக்கல் எதுவும் ஏற்படவில்லை. மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களில் எவருமே பெரும்பான்மையைப் பெறவில்லை என்ற நிலை ஏற்படுகின்ற போதே ஆளுநர் தமது எண்ணப்படியான தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். ஆளுநர் யாரை நியமித்தாலும் அவர் குறிப்பிட்ட கால எல்லைக்குள் தமது பெரும்பான்மையைச் சபையில் நிரூபித்தேயாக வேண்டும். பெரும் தமிழ்-முஸ்லிம் சர்ச்சைக்கு மத்தியில் சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களை கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமித்த ஜனாதிபதி அவர்கள் இப்படியானதொரு சிக்கலைச் சமாளிக்க - எதிர் நோக்க வேண்டியவரானார்;.
ஆரம்பத்தில் கிழக்கு மாகாணசபை கூட்டப்படும்போது முதலமைச்சர் மீதுள்ள நம்பிக்கையைத் தீர்மானிப்பதற்கான பிரேரணையின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் எனக் கூறப்பட்டது. அவ்வாறு விசேடமான வாக்கெடுப்பு எதுவும் இதுவரை நடந்ததாக இல்லை. அப்படியான வாக்கெடுப்பு எப்போது நடக்க வேண்டுமென ஆளுநரும் திகதி குறித்ததாக இல்லை. மாகாண அமைச்சரவையும் இதுவரை கூடி அது தொடர்பாக எதையும் தீர்மானித்து வெளியிட்டதாகத் தெரியவில்லை. இது தொடர்பாக மாகாண சபையிலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர் எவரும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரியவில்லை. எவ்வாறாயினும் நாடாளுமன்ற ஜனநாயக சம்பிரதாயங்களின்படி அவ்வாறானதொரு பிரேரணையின் மீதுதான் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாறாக ஆளுநரின் ஆரம்ப உரையின் மீது வாக்கெடுப்பு நடத்தி அதில் பெரும்பான்மையினரின் ஆதரவு வெளிப்படுத்தப்பட்டாலே போதுமானதாகும். மாகாணசபை ஒரு ஜனநாயகரீதியான மன்றமாக இருப்பதற்கு மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் தமது சபையின் செயற்பாடுகள் மற்றும் செயற்படும் முறைகள் தொடர்பான மரபுகள், நடைமுறைகள் பற்றிய அறிவுடையோராகவும் அக்கறையுடையோராகவும் இருத்தல் வேண்டும்.
2.ஆளுநரின் தன்னிச்சையான அதிகாரங்களில் இரண்டாவது விடயத்தைப் பார்ப்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்பட்டுவரும் அரசாங்கம் எவ்வாறு செயற்பட்டு வருகின்றது என்பது பற்றியும், மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிலைமைகள் எவ்வாறு உள்ளன என்பது பற்றியும் ஆளுநர் மத்திய அரசாங்கத்துக்கு அடிக்கடி அறிக்கைகள் சமர்ப்பித்துக் கொண்டிருப்பார். அதன்மீது முதலமைச்சரோ அல்லது மாகாண அமைப்பிலுள்ள வேறு எவருமோ தலையிட முடியாது. அவரது அறிக்கைகள் சரியானவையா தவறானவையா எனப்பார்வையிடும் அதிகாரமும் யாருக்கும் இல்லை. எனினும் பதவியிலிருக்கும் மாகாண அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை ஆளுநர் மக்கள் மத்தியில் வெளியிடக் கூடாது. இது nளிப்படையாகக் கூறப்பட்டுள்ள சட்டமல்லவெனினும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒரு சம்பிரதாயமாகும். ஏனெனில் பதவியிலுள்ள மாகாண அரசாங்கம் அங்குள்ள ஆளுநரின் அரசாங்கம் என்பதே அரசியல்யாப்பின் தாற்பரிய விளக்கமாகும். ஓர் ஆளுநர் அந்தப் பதவியில் இருக்கும் காலகட்டத்தில் எவ்வகையிலும் ஓர் குறிப்பிட்ட அரசியற் கட்சியைச் சேர்ந்தவர் என்ற நினைப்பில் செயற்படக் கூடாது. இலங்கையில் சில ஆளுநர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசியற் கட்சிக்காரர்களாக செயற்பட்டு வருகின்றமையைக் காணலாம் இந்தநிலை மாற்றப்பட வேண்டும்.

3.ஆளுநர் தானாகத் தீர்மானிக்கக் கூடிய மற்றொரு விடயம் -- பதவியிலிருக்கும் மாகாண அரசாங்கத்தின் முதலமைச்சர், ஏதாவது காரணத்தால் பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்படுமாயின் அவ்வாறான சந்தர்ப்பத்தில் மாகாண ஆளுநர் தானாகவே; தீர்மானித்துச் செயற்படுவார்;. பெரும்பான்மையைப் பெறக் கூடியவர் என வேறு எவராவது நிரூபித்தால் அல்லது ஆளுநர் அவ்வாறொருவர் இருப்பதாகக் கருதினால் அவரை அழைத்து முதலமைச்சராக நியமித்து பதவியை ஏற்கும்படி கூறி அவர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நாள் குறிக்கலாம்;.

இருக்கும் உறுப்பினர்களுக்குள் பெரும்பான்மையானவர்களின் நம்பிக்கையைப் பெறக்கூடியவர் என எவருமில்லாத சூழ்நிலை ஏற்படுமிடத்து, அவ்வாறு ஆளுநர் கருதுமிடத்து அவர் மாகாண சபையைக் கலைக்கவும் புதிய தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசாங்கத்துக்கு சிபார்சு செய்யவும் தன்னதிகாரம் கொண்டவராவார். அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுகிற போது எற்கனவே பதவியில் இருந்த முதலமைச்சரையே தேர்தல் முடிந்து புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை அரசாங்கத்தை நடத்தும்படி ஆளுநர் கேட்பதே மரபாகும்.
இவ்வாறானதொரு சிக்கல் இதுவரை இலங்கையில் ஏற்படவில்லை. அவ்வாறு ஏற்பட்டால் இங்கு ஆளுநர்கள் எவ்வாறு செயற்படுவார்கள். இலங்கையின் உச்சநீதிமன்றம் எவ்வாறு நிர்ணயிக்கும் என்பவை பற்றி இப்போது ஊகத்தில் எதுவும் கூறமுடியாது. இவ்விடயத்தில் இந்தியாவில் பல தவறான நடைமுறைகள் பல சந்தர்ப்பங்களில் கடைப்பிடிக்கப்பட்டன. ஆனால் காலப் போக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்களின் மூலம்; மிகத் தெளிவான வழிகாட்டல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பதவியில் இருந்த கடந்த சில இந்திய ஜனாதிபதிகளும் உறுதியான தெளிவான சம்பிரதாய நெறிமுறைகளை வகுத்துள்ளார்;கள்.
4.13வது திருத்தத்தில்; மாகாண ஆளுநர் மாகாண சபையைக் கூட்டவும், கூட்டாமல் நிறுத்தி வைக்கவும், கலைக்கவும் அதிகாரம் உடையவர் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு புலியிச சட்ட மேதைகள் “13ஆவது திருத்தத்தின்படி மாகாண ஆளுநரே எல்லாம் வல்லவர்||,அவர் எந்த நேரத்திலும் மாகாண சபையைக் கலைக்கும் அதிகாரம் உடையவர்||, ஆளுநர் மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்படுவதால் மத்திய அரசாங்கம் எந்த நேரத்திலும் மாகாண சபையைக் கலைத்து விடும்||, எனவே 13வது திருத்தப்படி மாகாண அரசாங்கம் எந்தவித அதிகாரமும் அற்றது|| எனப் பூச்சாண்டி காட்டும் விளக்கங்களை அளிக்கின்றனர். 13வது திருத்தம் தொடர்பாக சத்தியேந்த்pரா போன்ற புலிச் சட்ட மேதைகள்; தமிழ் கார்டியன் போன்ற புலிகளின் இணையத் தளங்களில் வெளியிட்டுள்ள கட்டுரைகளில் இக் கருத்துக்களைக் காணலாம்
இது சரியான கருத்தல்ல. மக்களை அறிவிலிகளாக்கும் பிழையான ஒரு பிரச்சாரமுமாகும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண அரசாங்கம் பெரும்பான்மை ஆதரவுடன் மேற்கூறப்பட்டவற்றில் எதையும் ஆளுநரானவர் மாகாண முதலமைச்சரின் அறிவுரையின்படியே செயற்படுத்தல் வேண்டும் என்பதையும் அதே பத்தியிலேயே அரசியல்யாப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு மாறாக ஆளுநர் செயற்பட்டால் முறையாக உள்ள மாகாண சபையின் தலைவரோ, அதிலுள்ள கட்சிகளின் தலைவர்களோ ஆளுநரின் கட்டளைக்கு இணங்கவேண்டிய அவசியமில்லை. அவ்வாறு ஆளுநர் தவறாகச் செயற்படுவது அரசியல் யாப்புக்கு விரோதமானதாகும். அவ்வாறான வேளையில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மேலும் ஆளுநரை நீக்கும்படி சட்டசபபையில் தீர்மானமும் நிறைவேற்றலாம்.
5.மெத்தப்படித்த புலியிச சட்ட மேதைகள் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு படி போய் 13வது திருத்தப்படி மாகாண ஆளுநருக்கே அனைத்து நிறைவேற்றதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. மாகாண முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் அதிகாரம் எதுவுமற்ற வெறும் ஆலோசகர்கள்தான் என சட்டவியாக்கியானம் செய்கின்றனர். புலியிசத்தில் மயங்கிப் போயிருப்பவர்களுக்கு அவர்கள் என்னதான் பட்டங்கள் பெற்றிருந்தாலும் அறிவு மழுங்கிப் போவது புதினமானதல்ல. புலியிசத்தின் வளைக்குள் அகப்பட்டவன்; தன்னையும் ஏமாற்றுவான், தன்னைச் சூழந்துள்ளவர்களையும் ஏமாற்றுவான் என்பதே இயல்பாகியுள்ளது புலிப்பக்தர்களை நிதானம் இழந்து காளி, முனி, காட்டேரிப் பேயென உருவெடுத்தாடும் நிலையில் வைத்திருப்பதற்கு உடுக்கு அடிப்பவர்களே புலிப்பூசாரிகள். இந்த புலிச்சட்ட மேதைகளும் அந்தப்பூசாரிகளின் பல்வகைகளில் ஒரு வகையினரே.

அரசியல்யாப்பு மாகாண ஆளுநரிடம் நிறைவேற்றதிகாரங்களை ஒப்படைத்திருப்பதன் சட்ட விளக்கம் அவர் நிறைவேற்றதிகாரம் படைத்தவர் என்பதல்ல. அது சட்டமரபுரீதியான ஒரு வாக்கியமாகும். ஒரு பாமரமகன் அவ்வாறானதொரு சந்தேகம் எழுப்பினால் அர்த்தம் உண்டு. சட்டம் படித்தவர்கள் அவ்வாறு வியாக்கியானம் கொண்டால் அது தவறாகும். அரச தலைவரிடம் நிறைவேற்றதிகாரம் அரசியல் யாப்பு ரீதியாக ஒப்படைப்பதுவும் உண்மையில் அந்த நிறைவேற்றதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின தலைவராலேயே நிறைவேற்றப்படுவதுவுமே நடைமுறையாகும். பிரிட்டனில் அந்நாட்டு அரசியல் யாப்பின்படி மகாராணியிடமே நிறைவேற்றதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியினதும் மற்றும் அமைச்சர்களினதும் அறிவுரையின்படி மகாராணியே அவற்றை நிறைவேற்றவார் என்பதே அந்தநாட்டின் சட்டவாக்கியம். ஆனால் பிரதம மந்திரியும் அவரது அமைச்சர்களும்தான்; அங்கு நிறைவேற்றதிகாரம் கொண்டவர்கள் என்பது அரசியல் தெரிந்த பலருக்கும் தெரியும்.
இந்திய அரசியல்யாப்பிலும், 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கையின் அரசியல்யாப்பிலும் ஜனாதிபதியிடமே நிறைவேற்றதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியும் மற்றும் அமைச்சர்களும் ஜனாதிபதிக்கு அறிவுரையாளர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் பிரதம மந்திரியே நிறைவேற்றதிகாரம் படைத்தவர் என்பதை நாமறிவோம். கனடா மற்றும் அவுஸ்திரேலியாவைப் பார்ப்பின் அந்த நாடுகளின் அரச நிறைவேற்றதிகாரம் அந்த நாடுகளில் உள்ளவரிடம் அல்ல மாறாக அரசியல்யாப்பின்படி பிரிட்டனி;ன் மகாராணியிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. மகாராணியின் பேரில் மகாராணியின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அந்த நாடுகளின்; மகாதேசாதிபதிகளே அதிகாரங்களை நிறைவேற்றுவர் என்றே அவர்களின் அரசியல் யாப்பு கூறுகின்றது. அந்த நாடுகளின் சட்ட வாக்கியங்களின்படி பிரதம அமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் மகாதேசாதிபதிக்கு அறிவுரை கூறுபவர்களே. அதனது அர்த்தம் வெறுமனே ஆலோசகர்கள் என்பதல்ல. மாறாக உண்மையான நிறைவேற்றதிகாரம் அவர்களிடமே உண்டு.
அவ்வாறே, மாகாண மட்டத்தில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் என்னும் இரண்டு அமைப்புக்களைக் கொண்ட நாடுகள் அனைத்தினது அரசியல் யாப்பிலும் ஆளுநரிடம் நிறைவேற்றதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அறிவுரையின்படி ஆளுநர் அந்த நிறைவேற்றதிகாரங்களை செயற்படுத்துவார் என்றுமே அவற்றின் அரசியல் யாப்புக்கள் கூறுகின்றன. எனவே அவ்வாறே அமைந்த 13வது திருத்தச்சட்டத்துக்கு மட்டும் மாறுபட்டரீதியாக விளக்கமளிப்பது தவறானதொன்றாகும். அரசியல்யாப்பில் ஆங்கிலத்தில் advice என்று உள்ள சொல்லுக்கு ஆலோசனை என்று மொழி பெயர்க்காமல் அறிவுரை என்று மொழி பெயர்த்து புரிந்து கொண்டால் ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கிடையேயான நிறைவேற்றதிகாரம் பற்றிய விடயத்தை குழப்பமின்றி தெளிவாகப் பரிந்து கொள்ளலாம்.
இலங்கையின் அரசியலில் பெரும்பாலும் தமிழர்கள் இதுகாலவரை அரசை எதிர்க்கும் அரசியலில் மட்டுமே தீவிரமாகப் பங்குபற்ற் வந்ததனால் ஓர் அரசாங்கத்தை நடத்துவதில் உள்ள சட்டங்களையும் சம்பிரதாயங்களையும், அதைக் கொண்டு செலுத்துவதில் உள்ள நெளிவுசுழிவுகளையும் அநுபவரீதியாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவதில் காலதாமதம் ஆகிவிட்டமையும் இன்றைய தவறான புரிதல்களுக்குக் காரணமாகும். இதேவேளை அரச அதிகாரத்தில் செல்வாக்குடையவர்களாக இருக்கும் சிங்கள இனவாத அமைச்சர்களும் மத்திய அரசில் செயலாளர் மட்டத்திலுள்ள அதிகாரிகளும் சட்டங்களை தங்களுக்கு வசதியாக திரிபுபடுத்திய ரீதியில் விளக்கமளித்து அதிகாரப் பகிர்வுக்கு தடையாக இருக்கிறார்கள் என்பதுவும் யதார்த்தமாகும்.
13வது திருத்தச் சட்டத்தில் அதிகாரங்கள் குறைவாகவே கொடுக்கப்பட்டிருக்கின்றன. ; அதில் ஒருபக்கத்தில் அதிகாரங்கள் கொடுப்பது போல் கொடுக்கப்பட்டு இன்னொரு பக்கத்தில் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன என்கின்ற பொதுவான குறைகள் உள்ளன. அதுஒருபுறமிருக்க, அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை உறுதிப்படுத்தும் நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் முதலில் நடைபெற வேண்டும். இப்போதுள்ள நிலையில் 13வது திருத்தம் குறைந்தபட்சமாவது திருப்தியாகச் செயற்பட வேண்டுமானால்,
01 13ஆவது திருத்தத்தின் அமுலாக்கலுக்காக பேராசிரியர் திஸ்ஸவிதாரண அவர்கள் அளித்துள்ள சிபார்சுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
02 அதிகாரப் பகிர்வுமீது அக்கறையும் அறிவும் அனுபவமுதிர்ச்ச்pயும் கொண்ட மூன்றுபேரையோ அல்லது ஐந்து பேரையோ கொண்ட ஓர் அதிகாரப் பகிர்வு ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்து இது ஓர் அரசியல்யாப்பு நீதிமன்றத்தின் தரத்தைக்; கொண்ட நடுவர் மன்றமாகவும் (Tribunal), மத்திய மாகாண அமைச்சுக்களுக்கு அறிவுரை வழங்கும் சபையாகவும் ((Advisory Board) செயற்பட வேண்டும்.
03.மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு இருபது வருடங்களாகியும் அரசியல்யாப்பில் திட்டவட்டமாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறிப்பாக நிலங்களின் நிர்வாகம்;, மாகாண பொலிஸ் அமைப்பின் உருவாக்கம், வரிவருமானங்கள் மீதான அதிகாரங்கள், மாகாண அரசின் அதிகாரங்களுக்கு உட்பட்ட விடயங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியுதவிகளை மாகாண அரசாங்கத்தின் அதிகாரங்களுக்குக் கீழ் கொண்டு வருதல், ஆசிரியர்கள் நியமனம் எனப்பல விடயங்கள் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டினை வேண்டி நிற்கின்றன. இவ்விடயங்களுக்கு மாகாணசபைகளும், அதிகாரப் பகிர்வு மீது அக்கறை கொண்ட சமூக நிறுவனங்களும் உச்ச நீதிமன்றத்தை அணுகி சரியான சட்ட விளங்கங்களையும் தேவையான நிர்ணயங்களையும் கோருதல் வேண்டும். இனவாதிகள் அதிகாரப் பகிர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளமையே இதுவரை நடந்துள்ளது. மாறாக, அதிகாரப் பகிர்வு தொடர்பாக சமூகநீதியையும் சட்ட நியாயங்களையும் வேண்டி உச்சநீதிமன்றத்தை அணுகுவது அவசியமாகும்.
04 மாகாண சபைகள் ஒவ்வொன்றும் தமக்கென அரசியற் சட்ட நிபுணர்களை ஆலோசகர்களாகக் கொண்டிருக்க வேண்டும். அவர்களின் ஆலோசனையுடன் இருக்கும் அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் தாமாகவே நிலைநாட்டும் வகையில் அவசியமான சட்டங்கள் அனைத்தையும் ஆக்குவதில் தீவிரமான முன்முயற்சிளை மேற்கொள்;ளுதல் வேண்டும். மாகாண அரசு ஒரு வல்லமையுடைய நிறுவனமாக மாற்றியமைக்கப்படும் வகையில் சட்டபூர்வமாக தகுந்த நிர்வாக உத்திகளை நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.

அதிகாரப்பகிர்வை முழுமையாக நிலைநாட்டுவதுவும் மாகாண அரசமைப்பை திறனுடையதாகவும் வலுவுடையதாகவும் ஆக்குவதும் மத்திய அரசாங்கத்தின் அரசியல்யாப்பு பூர்வமான கடமையேயாயினும், மாகாண மக்களும் மாகாண அரசியற் தலைவர்களும் அரசியல் பொருளாதார அறிஞர்களும், சமூக நிறுவனங்களும் இவ்விடயத்தில் உணர்வுபூர்வமான ஈடுபாடு காட்ட வேண்டும். தேர்தலில் வாக்குகளைப் போட்டுவிட்டால் போதும் அரசியல் அதிகாரப் பகிர்வு நடந்து முடிந்துவிடும் என நினைப்பது பிள்ளையாருக்குத் தேங்காயுடைத்து பரீட்சையில் சித்தியெய்த நினைப்பது போன்றதுதான். எதிலும் சித்தியெய்துவதற்கு - இலக்கை அடைவதற்கு இடைவிடாத அர்ப்பணமும் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளும் அவசியமாகும்.

- உதயம் நெற்

 
Updated 03-08-08   <<Feed Back >>   <<Tell Your Friend >>  
 
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.