Untitled Document
Untitled Document
இந்து பயங்கரவாதமே இஸ்லாமிய பயங்கரவாதமாகின்றது ....ஊடகங்களில் முஸ்லீம்கள் - ச.பாலமுருகன......இலங்கை பிரஜைகள் ஒவ்வொருவரினதும் முதல் எதிரி பயங்கரவாதமே........கருணா அம்மானுடன் அதிரடி இணையம் நேரடிச் செவ்வி முஸ்லிம்களின் படுகொலை புலிகள் திட்டமிட்டு நிறைவேற்றியது, முஸ்லிம்கள் பற்றிய கேள்விக்கு பதில்...

Untitled Document

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கொம்பனிதெரு வீடுகள் தகர்ப்பு விவகாரம்
தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்.

 

கொழும்பு கொம்பனித்தெருவில் 100 ஆம் தோட்டம் என்றழைக்கப்படுகின்ற கிளனி வீதியில் காலாதிகாலமாக குடியிருந்துவந்த மக்களை திடுதிப்பென வெளியேற்றி அக்கட்டிடங்களை நகர அபிவிருத்தி அதிகார சபை இயந்திரங்களைப் பயன்படுத்தி தரைமட்டமாக்கிய சம்பவம் கடந்த வாரத்தில் இடம்பெற்றமையும் அதனால் உருவான நெருக்கடி நிலையும் விவகாரத்தை நீதிமன்றம் வரைகொண்டு செல்லும் நிலைக்குத் தள்ளிவிடுமளவுக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த கவலைதரக்கூடிய சம்பவத்தை அனைத்து ஊடகங்களும் முழு நாட்டுக்குமே அறிவிக்கத் தவறவில்லை. இச்சம்பவத்தால் ஆத்திரமுற்ற குடியிருப்பாளர்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடனும் பொலிஸாருடனும் மோதுமளவுக்குச் சென்றதுடன் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகையை பிரயோகிக்கும் நிலைமை கூட உருவானது. ஒரு குடும்பம் வீடில்லாமல் நடுத்தெருவுக்கு வருவதென்பது மிகவும் வேதனை தரக்கூடியதொன்றாகும். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கொம்பனித்தெருவிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதை காண்பவர்களின் உள்ளங்கள் குமுறாதிருக்க முடியுமா?

எமது நாட்டு மண்ணில் நான்கில் இருபங்கு ஆறு, ஓடைகள் போன்ற நீர் நிலைகளைக் கொண்டதாகவும் காடுகளைக் கொண்டதாகவுமே உள்ளன. ஒருபகுதி நெடுஞ்சாலைகளாகக் காணப்படுகின்றது. மீதமுள்ள ஒருபகுதி மட்டுமே மக்களின் குடியிருப்புக்காக உள்ளது. இந்த ஒரு வீதத்தில் சட்டபூர்வமாக குடியிருப்பவர்கள் போன்று சட்டவிரோத குடியிருப்புகளும் நாட்டில் பரவலாகவே காணப்படுகின்றன. சட்டவிரோத குடியிருப்புகள் விடயத்தில் அரசாங்கம் எப்போதுமே பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால், தாக்கமொன்று ஏற்படுகின்ற வேளையில் அதனுடன் சம்பந்தப்பட்ட பகுதியில் மட்டும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் முற்படுகின்றனர். கொம்பனி வீதிச் சம்பவத்தை அதிலொரு அம்சமாகவே நோக்கவேண்டியுள்ளது. ஒரு வீடு அல்லது கட்டிடம் சட்டவிரோதமாக அமைக்கப்படுமானால் அதனை தகர்த்து விடுவது தவறு என்று கூற முடியாது. அதில் தர்க்கத்துக்கு இடமேயில்லை. ஆனால், இங்கு முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய பலவிடயங்கள் காணப்படுகின்றன. சட்டவிரோத கட்டிடங்களை உடைத்து அப்புறப்படுத்த வேண்டியது அவை நிர்மாணிக்கப்படும் ஆரம்ப கட்டத்திலேயேயாகும். 30, 40 வருடங்கள் வரை அரசும் அதிகாரிகளும் ஆழ்ந்த நித்திரையிலிருந்துவிட்டு திடீர் கனவுகண்டு பயத்தில் வாரிச் சுருட்டிக்கொண்டு சட்டத்தைப் பயன்படுத்த முனைவதானது ஒரு தவறை மூடிமறைப்பதற்குப் போய் பல தவறுகளைப் புரியும் செயலாகவே காணப்படும். அந்த நிலைமை தான் இன்று கொம்பனித் தெரு சம்பவத்தால் ஏற்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையொன்று இந்த நாட்டிலுள்ளது. அனைத்து மாவட்டங்களையும் உள்வாங்கப்பட்டவையாக பிரதேச சபைகளும் நகர சபைகளும் மாநகர சபைகளும் அமைந்துள்ளன. இந்த ஆட்சி நிறுவனங்களின் பிரதான பணிகளில் ஒன்றுதான் சட்டவிரோத கட்டிடங்கள் உருவாவதை தடுத்தல், சட்டவிரோத குடியிருப்புகளுக்கு இடமளிக்காது பார்த்துக்கொள்வது என்பவையாகும். எனினும், அந்தப் பொறுப்பை, கடப்பாட்டை உரியமுறையில் இந்த ஆட்சி நிறுவனங்களும் அதிகார சபையும் நிறைவேற்றுவதாகவே தெரியவில்லை. இது இன்று, நேற்று நடக்கும் சம்பவங்கள் அல்ல. வரலாற்று நெடுகிலும் இது காணப்படவே செய்கின்றது. கண்களை மூடிக் கொண்டிருந்து விட்டு ஏதோவொரு காரணத்துக்காக திடீரென நடவடிக்கையிலிறங்க முற்படுகின்றபோது சட்டவிரோத குடியிருப்பாளர்கள் தாம் பிறந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படுவதற்கு உதவுவதாகவே அமைகின்றது.

ஆரம்பத்தில் சட்ட வீரோதமாக வீடுகளையோ, கட்டிடங்களையோ அமைக்கவிடாது குடியமரவிடாது தடுத்து சம்பந்தப்பட்ட மக்கள் வாழ்வதற்குரிய வசதிகளை அரசு செய்து கொடுக்க முற்பட்டிருந்தால் இத்தகைய அவலங்கள் ஏற்பட வழிபிறந்தே இருக்க முடியாது. இங்கு இன்னுமொரு விடயத்தை சுட்டிக்காட்டியாக வேண்டும். அரசியல் வாதிகளும் இந்த விடயத்தில் பங்குதாரர்களாக இருப்பதே அந்த விடயமாகும். மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு அதிகாரத்துக்கு வருவதற்காக இந்த அரசியல் வாதிகள் முறைகேடான செயற்பாடுகளிலீடுபடுகின்றனர்.எங்காவது ஒரு நிலத்துண்டு வெற்றுத் தரையாகக் காணப்பட்டால் அது யாருக்குரியது, அரசின் எந்தப்பணிக்குரியது என்று சிறிது கூட ஆராயாமல் எடுத்த எடுப்பிலேயே அந்த அப்பாவி மக்களை குடியேற்றி தாம் மக்களுக்கு பெரும் சாதனை புரிந்து விட்டதாக காண்பித்து தப்பித்துக்கொள்கின்றனர். ஆரம்பத்தில் சலசலப்புகள் ஏற்படும்போது அதிகாரிகளை தம் கைக்குள் எடுத்து அவர்களுக்கு இரகசியமாக கைம்மாறு ஏதாவது செய்து வாயை மூடி விடுகின்றனர். இங்குதான் ஊழலும், மோசடியும் ஆரம்பமாகி விடுகின்றன. அத்துடன் அந்த சட்ட விரோத குடியிருப்புகளுக்கு மின்சார இணைப்புகள், குழாய் நீர் வசதிகள், பெற்றுக் கொடுக்கப்படுவதோடு நகர சபைக்கான வரிகள் கூட பெறப்படுகின்றன. சட்டவிரோத கட்டிடங்களுக்கு சட்ட பூர்வ அந்தஸ்து இதன் மூலம் கிடைப்பதாக இவற்றைக் கருத முடியாதா எனக் கேட்க விரும்புகின்றோம்.

இவற்றையெல்லாம் கூர்மையாக கவனத்தில் கொண்டு இந்த மக்களைப் பாதிக்காத விதத்தில் அவர்களை நடுத் தெருவிலிருந்து, சட்ட பூர்வமான இருப்பிடங்களில் அமர்த்துவதற்குரிய செம்மையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தற்காலிக நடவடிக்கை என்று கூறப்படுவது அங்கீகரிக்கப்படமுடியாது. ஏனெனில் அது கூட இன்னொரு தவறுக்கு வழிதிறந்து விட முடியும். இருப்பிடங்களை இழந்து கண்ணீர் வடிக்கும் இந்த அப்பாவி மக்களுக்கு இச்செயல் மேலும் அவலங்களைத் தந்து விடுவதாகவே அமைந்து விடும். தவறுகளுக்கு இடமளிக்காது உறுதியானதும், நிரந்தரமானதுமான நடவடிக்கையே அவசரப்பணியாக அமைய வேண்டும்.

 
Updated 01-08-08   <<Feed Back >>   <<Tell Your Friend >>  
 
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.