கிழக்கு மாகாணம் கருணா அம்மானாலும் உயர் நீதிமன்றத்தாலும் பிரிக்கப்பட்டதன் ஊடாக கிழக்கில் இடம் பெற்ற தேர்தல்களின் ஊடாக கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களுக்கு ஒரு அரசியல் எதிர்காலம் பிறந்திருக்கின்றது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு யாழ் மேலாதிக்க புலித் தலைமைகளாலும் முஸ்லிம் மக்கள் கொழும்பு சந்தர்ப்பவாத தலைமைகளாலும் ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்டு வந்துள்ளதை வரலாற்றை ஊன்றி அவதானித்தால் புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு வாய்ப்பாக கிழக்கு மண்ணை கிழக்கு மக்களே ஆளும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.இந்த பொன்னான சந்தர்ப்பத்தை கிழக்கு மக்களுடன் இணைந்து கிழக்கு தமிழ் முஸ்லிம் அரசியல் சக்திகளும் பயன்படுத்தி கிழக்கைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.வடக்கு புலி மேலாதிக்கமும் கொழும்பு ; சிங்கள பேரினவாதமும் கிழக்கை மீண்டும் ஆக்கிரமிக்கவும் கிழக்கின் மிகப் பெரிய இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
இந்த மாகாண சபைத் தேர்தலின் போது கிழக்கு மண்ணை அபகரிக்க பச்சை நிற சிங்கள பேரினவாதமும் யாழ் புலி மேலாதிக்கமும் முஸ்லிம் காங்கிரஸை பயன்படுத்த தி;ட்டமிட்டு செயற்பட்டிருந்தன.அதே போன்று அரச சிங்கள பேரினவாதம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை பயன்படுத்தி தனது இலக்கை அடைந்து கொள்ள களத்தில் இறங்கி வெற்றியடைந்துள்ளது.சிவப்பு ஜே.வி.பி பேரினவாதம் கிழக்கை பிரிக்க வழக்கு வைத்ததற்கு பகரமாக கிழக்கை சிங்கள மயமாக்க வரிந்து கட்டிக் கொண்டு தற்போதும் களத்தில் நிற்கின்றது.
இந்த சூழ் நிலையில் கிழக்கு மண்ணைப் பாதுகாத்து கிழக்கு மக்களே கிழக்கை ஆள்வதற்கு தமிழ் முஸ்லிம் அரசியல் சக்திகள் தனது சொந்த அரசியல் நிகழ்ச்சி;த் திட்டங்களையும் சுயநல பதவி ஆசைகளையும் தூக்கியெறிந்து விட்டு ஒன்றிணைந்து ஒரு பொது அமைப்பின் கீழ் அரசியல் செய்வதற்கு முன்வர வேண்டும்.
கிழக்கைப் பலப்படுத்தி பாதுகாப்பதற்கான சகல கடப்பாடுகளும் கடமைகளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமே உண்டு என்பதை இந்த இரண்டு தரப்புக்களும் மனம் கொள்ள வேண்டும்.
கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிங்கள அரசுக்கு பலம் சேர்ப்பதற்காக தமது வாக்குகளை அளிக்கவில்லை.தமக்கான தலைமைத்துவம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவையின் அடிப்படையிலேயே தமது வாக்குகளை அளித்தனர்.கருணா அம்மான் இத் தேர்தலில் பங்கு கொண்டிருந்தால் இன்னும் கூடுதலான வாக்குகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பெற்றிருக்கும்.கிழக்கு தமிழ் மக்களுக்கு நீண்டதும், நிரந்தரமுமான ஒரு தலைமைத்துவ அமைப்பு இன்றியமையாததாகும்.பல தசாப்தங்களாக கிழக்கு தமிழ் தலைமைத்துவம் திட்டமிட்டு அழித்து ஒழிக்கப்பட்டுள்ளது.ஆகவே தமக்கான தலைமையை உருவாக்கும் வரலாற்று கடமைக்காக தமிழ் மக்கள் வாக்களித்து அடித்தளமிட்டுள்ளார்கள்.தமிழ் மக்கள் வாக்களித்து நிறைவேற்றிய கடமையை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு உரியதாகும்.
என்னதான் தவறுகளும் பிழைகளும் மனித உரிமை மீறல்களும் இருந்தாலும் கூட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை கிழக்கு தமிழ் மக்கள் அங்கீகரித்துள்ளார்கள்.அதே போன்று சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸையும் முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக அங்கீகரித்து வந்துள்ளார்கள்.மக்கள் அங்கீகரித்துள்ள கிழக்கின் இந்த இரண்டு சக்திகளும் இணைந்து பொது வேலைத் திட்டத்தின் கீழ் பொது அமைப்பொன்றைக் கட்டியெழுப்பி மக்களிடம் கையளிப்பதன் ஊடாகவே எதிர்காலத்தில் கிழக்கை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க முடியும்.மாகாண ஆட்சியை நிறுவியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும்,பலமான எதிர்க் கட்சியாக இடம் பிடித்திருக்கும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் சிங்கள பேரினவாதத்தின் பிடியில் இருந்தும் புலிகளின் வலைப்பின்னலில் இருந்தும் விடுபட வேண்டும். உண்மையாகவே கிழக்கையும் மக்களையும் நேசிக்கும் அக்கறையுள்ள சக்திகளாக இவையிரண்டும் இருக்குமானால் உடனடியாக எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்வர வேண்டும்.இவ் இணைவு மாத்திரமே கிழக்கு மண்ணையும் மக்களையும் எதிர்காலத்தி;ல் தொடர்ந்தேர்ச்சியாக பாதுகாக்கும்.இல்லையேல் மீண்டும் ஒரு சிங்கள புலி ஆக்கிரமிப்புக்கும் சுரண்டலுக்குமே இவ்விரண்டு சக்திகளும் வழிசமைத்துக் கொடுக்கும்.
|